Tuesday, January 10, 2012

மீண்டும் மிளிருமா கிராமத்தின் ஒளிவிளக்கு

மீண்டும் மிளிருமா கிராமத்தின் ஒளிவிளக்கு
ஒரு சமூகத்தின் அபிவிருத்தி;க்கும் சமூக முன்னேற்றத்திற்றும் வழிவகுப்பது சமூக அமைப்புக்களும் சமூக நிறுவனங்களும் ஆகும். குறிப்பாக கிராமப்புறங்களின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் சமூக நிறுவனங்களும் பிரதான பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் கிராமத்தின் ஒளிவிளக்காக விளங்கும் சன சமூக நிலையங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன.
தென்மராட்சிப்பிரதேசத்தின் வடக்கே அமைந்துள்ள சரசாலை தெற்கு கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திக்கும் மக்களின் சமூக நல மேம்பாட்டிற்கும்  பெரிதும் உறுதுணையாக அமைந்தது மகேஸ்வரி சனசமூகநிலையமாகும். இது இன்று ஒளிமங்கி வலுவிளந்து அயல்பெண்களின் அரட்டை அரங்கமாகவும் ஏனைய இளைஞர்களின் பொழுதுபோக்கிற்கான ஓர் இடமாகவும் இரவுகளில் கால்நடைகளின் புகலிடமாகவும் மாறிவருகின்றது .
கிராமத்தின் நலன்கருதி கிராம மக்களின் முன்னேற்றம் கருதி ஊர்ப்பிரமுகர்களால் ஒன்றுபட்டு உருவாக்கப்பட்டு  கிராமத்தின் பல்வேறு நலன்புரிச்செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக அமைந்தது.
மகளிருக்கான பல்வேறு தொழிற்பயிற்சிகள் , பாலர்கல்வி நிலையம், சிறுவர்பூங்கா, வாகிசசாலை என பலபிரிவுகளைக்கொண்டு கிராம மக்களுக்கு பல்வேறு நலச்சேவைகளை ஆற்றிவந்த இந்த சனசமூக நிலையம் இன்று தனது வாசகர்களை இழந்து பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதன் ஆரம்பகாலத்தலைவராக இருந்த திரு. சரவணமுத்து தங்கராசா அவர்கள் அயராது அல்லும் பகலும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இச்சமூக நிலையத்தின் சேவையை விரிவுபடுத்தி செயற்படுத்தி வந்தார்.
பின்னர் 2006ஆம் ஆண்டு இவர் இயற்கையை எய்தியவுடன் இந்நிலையத்தின் செயற்பாடுகள் பணிகள் அனைத்தும் அப்படியே ஸ்தம்பித்து விட்டன. பாலர்கல்வி நிலையம் இருந்த இடமே தெரியாது சென்றுவிட்டது. சிறுவர்பூங்காவும் குடும்பப்பெண்களின் பூங்காவானது. நிலையக்கட்டிடமோ அயற்பெண்களின் அரட்டைக்கூடமாகக்காணப்படுகின்றது. புதினப்பத்திரிகை இங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டது. தற்பொழுது புதினப்பத்திரிகை எடுப்பாரும் இல்லை பார்ப்பாரும் இல்லை. சனசமூக நிலையம் தற்பொழுது செயலிழந்து பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கின்றது. இதனால் வயோதிபர்கள் இளைஞர்கள், மக்கள் ஆகியோர் ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள ஏனைய சமூக நிலையங்களுக்கும் நூலகங்களுக்கும் சென்று பத்திரிகை படிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் இச்சமூக நிலையத்தை மீள இயங்கச்செய்து இந்நிறுவனத்தின் பழைய சேவைகளை மக்களுக்கு வழங்கமாட்டார்களா எனவும் கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர். எனவே சம்மந்தப்பட்டோர் இதனை கருத்தில் எடுத்து இச்சனசமூக நிலையத்தை இயங்கச்செய்தோ அல்லது மீள உருவாக்கியோ புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியோ இந்நிறுவனத்தை புத்துயிர்பெறச்செய்து மக்களுக்கு மீண்டும் இச்சேவைகளைச்செய்யவேண்டும் என கிராமமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment